568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
வானவில் மன்றம்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களின் அறிவியல் திறனை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் அறிவிப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறையின் 2022-23-ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகள் காட்சிப்படுத்தப்படும். மேலும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் இப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 166 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 106 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 296 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுமையான முயற்சி
அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சுழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப பள்ளியில் இருந்தே அடிப்படை கல்வி அறிவு வழங்க வேண்டும். வானவில் மன்றத்தின் நோக்கத்தை செம்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் தாங்கள் தயார் செய்த அறிவியல் பூர்வமான பொருட்களை கொண்டு செயல் விளக்கங்களை செய்து காட்டினர். மேலும், மாணவ, மாணவிகளே தயார் செய்த கைவினைப்பொருட்களை கலெக்டர் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சென்னம்மாள், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.