200 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.
வானவில் மன்றம்
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் வானவில் மன்றம் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போது மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது.
இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. விழாவையொட்டி 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் வானில் பலூன்களை பறக்க விட்டனர். இதற்கு தலைமை ஆசிரியர் பிரமீளா தலைமை தாங்கினார். தொடர்ந்து ஆசிரியர்கள் அறிவியல் சோதனைகளை மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கற்றல் திறன்
இதையடுத்து பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தாமோதரன் கூறுகையில், நீலகிரியில் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த வானவில் மன்றம் சார்பில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் செயல்விளக்கம் செய்து காண்பிப்பது, மாணவர்களுக்கு கேள்விகள் கேட்கும் திறனை ஊக்கப்படுத்துவது மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான கருத்துகளை விளக்குவதற்காக குறைந்த விலையில் பல்வேறு பொருள்கள் வாங்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சோதனைகள் செய்து காண்பிக்கப்படும் என்றார்.