மாயமான மழைநீர் வடிகால்கள்


மாயமான மழைநீர் வடிகால்கள்
x
திருப்பூர்


தேசிய நெடுஞ்சாலையில் மாயமான மழைநீர் வடிகால்களினால் சாலையில் குவியும் மண்ணால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆக்கிரமிப்புகள்

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மாநில பகுதிகள் மற்றும் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் இந்த சாலை உள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால்கள் மாயமாக மறைந்துள்ளன. சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பல பகுதிகளில் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாத நிலை ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் சாலையோர மழைநீர் வடிகால்கள் முற்றிலும் தூர்ந்து போய் விட்டது. அத்துடன் புதர்ச் செடிகள் வளர்ந்து மூடிக் கிடக்கிறது.

இதனால் மழைக் காலங்களில் மழைநீர் வழிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விபத்துகள்

மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் கனமழைக்காலங்களில் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையோரங்களில் உள்ள மண் அரிக்கப்பட்டு சாலையில் குவியலாகக் கிடக்கிறது.

இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் சாலையோரங்களில் மட்டுமல்லாமல் சாலையிலும் மழைநீர் தேங்கி மண்ணுடன் கலந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையில் உள்ள மண் குவியலை அகற்றவும், முழுமையாக மழைநீர் வடிகால்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும். அத்துடன் மழைநீர் சாலையில் வளைந்து வீணாகாமல் நீர் நிலைகளை சென்றடைய வழி செய்ய முடியும்.


Next Story