சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 10-ந்தேதிக்குள் முடிவடையும் -மேயர் அறிவிப்பு


சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 10-ந்தேதிக்குள் முடிவடையும் -மேயர் அறிவிப்பு
x

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் வருகிற 10-ந்தேதிக்குள் முடிவடையும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா கூறினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மேயர் பிரியா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது.

மழைநீர் வடிகால் பணி

அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சென்னை மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு மேயர் பிரியா, 'மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. வருகிற 10-ந்தேதிக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும்' என பதில் அளித்தார்.

சொத்து வரி

கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் (இன்று) செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனிவட்டி விதிக்க அறிவுறுத்தப்பட்டது. சொத்து வரி செலுத்த போதிய கால அவகாசம் வழங்கும் வகையில் முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்துவரியை செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீதம் தனி வட்டி விதிப்பதை தளர்வு செய்து அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள் டிரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 3 லட்சத்து 10 ஆயிரத்து 139 கட்டிடங்கள் மாறுபாடு உள்ள கட்டிடங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரத்து 897 கட்டிடங்கள் வருவாய் துறை மூலம் அளவீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டது.

அபராதம் உயர்வு

அடையாறு-காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு கலைஞர் கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்ட வேண்டும்.சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை ரூ.1,550-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டல தலைவர்களுக்கு கார்; கவுன்சிலர்களுக்கு மோட்டார் சைக்கிள்

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு மற்றும் நியமனக்குழு தலைவர்கள் பணிகளை ஆய்வு செய்ய நிரந்தரமாக வாகன (கார்) வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி தி.மு.க. தலைவர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது கவுன்சிலர்கள் சிலர் தங்கள் வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்வதற்காக மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும் என்று கோரினர்.

முடிவில் மேயர் பிரியா, இதுசம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

சிங்கப்பூர் செல்ல ஆசைப்படும் கவுன்சிலர்கள்

சிங்கப்பூரை போன்று சென்னையை மாற்றும் வகையில் சிங்கப்பூரில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கவுன்சிலர்கள் நேரில் பார்வையிட்டு அதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களையும் சிங்கப்பூர் அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கவுன்சிலர் அதியமான் பேசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.


Next Story