சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்


சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்
x

சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தூய்மை பணி மேற்கொள்வதற்கான துப்புரவு வாகனங்கள் மற்றும் நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள், இணைப்பு பணிகள், சாலைகளில் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யும் வகையில் முதல்-அமைச்சர் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதன்படி, பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து சாலை பணிகளை முடிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மழைகாலம் என்பதால் புதிதாக சாலை தோண்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே உள்ள பணிகளை 10 நாட்களுக்குள் முடித்துத்தர வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இம்மாத இறுதிக்குள்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.30 கோடி மதிப்பில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் இணைப்புகள் எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் முடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இதனால், நெடுசாலைத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட துறைகள் இப்பணியை ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகிறது.

ஒப்பந்ததாரர்களுக்கும் விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story