பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் -தலைமை செயலாளர் உத்தரவு
பருவமழைக்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மோட்டார் பம்புகள்
கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:-
சென்னை பெருநகர மாநகராட்சியில் நடைபெறும் நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகள், தற்காலிக சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை 3 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலை, வானகரம் அம்பத்தூர் புழல் சாலை உள்பட பல பகுதிகளில் நடக்கும் சாலை வெட்டு சீரமைப்புப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாத 10 இடங்களில், மழைநீர் வெளியேற போதிய மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மழை நீர் வடிகால்
தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சியில் நடக்கும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஜி.எஸ்.டி. சாலை மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை வரும் 23-ந்தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை பருவ மழைக்கு முன்பு முடிக்க வேண்டும். புதிய சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது.
மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். சுரங்கப்பாதைகளில் மோட்டார் பம்புகள் அனைத்தும் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் சிரமமின்றி வாகனங்களில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.