சென்னையில் பருவ மழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பருக்குள் நிறைவு


சென்னையில் பருவ மழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பருக்குள் நிறைவு
x

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் நேரில் சென்று கவனிக்கிறார். அந்த பணிகளை சரிபார்த்து அதுபற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு குறிப்பு அளித்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி (40.80 கி.மீ. நீளம்) 32 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, ராஜமன்னார் சாலை, அபிபுல்லா சாலை, அசோக்நகர், ரிப்பன் பில்டிங், அஜீஸ் நகர், பராங்குசபுரம் மற்றும் அதன் பகுதிகளில் அந்த திட்டப் பணிகள் முடிவு பெற்றுள்ளன.

சிங்காரச் சென்னை 2.0 2-வது திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் தொடங்கி பணிகள் (20.03 கி.மீ. நீளம்) நடைபெற்று வருகின்றன. இதில் 12 சதவீத பணிகள் முடிந்துள்ளன. புளியந்தோப்பு, பிராட்வே, அடையாறு, அம்பேத்கர் சாலை போன்ற பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செப்டம்பருக்குள்...

வெள்ளம் நிவாரண நிதி சார்பாக 107.5 கி.மீ. நீள பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 14 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளன. எண்ணூர், கத்திவாக்கம், மணலி, மாதவரம், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பணி நடைபெற்று வருகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள் நிதி சார்பாக 10 கி.மீ. நீளத்திற்கான பணிகள் நடைபெற்று 21.40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அந்த வகையில் இவை உள்பட மொத்தம் 179.45 கி.மீ. நீளத்திற்கு ரூ.608 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொசஸ்தலையாறு படுகையிலும் 769 கி.மீ. நீளத்திற்கான பணிகளில் 28 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கோவளம் படுகையில் 320 கி.மீ. நீளத்திற்கான பணிகளுக்கு தற்போது பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியின் கீழ் நடக்கும் பணிகளில் 44.88 கி.மீ. நீளத்திற்கு 58 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளன. இந்த மழைநீர் வடிகால் பணிகளைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர், பருவமழை தொடங்குவதற்கு முன்பதாக 90 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் பணிகளை விரைவில் முடிப்பதற்கான ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய காலத்தில் பணியை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மழைநீர் வடிகால் பகுதிகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்புகழ் தலைமையிலான குழுவும் சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து சில பரிந்துரைகளை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர். அதை மாநகராட்சி பின்பற்றி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும்.

குடிநீர் பிரச்சினை வராது

சென்னைக்கு குடிநீர் நாளொன்றுக்கு ஆயிரம் எம்.எல்.டி. வழங்கப்பட்டு வருகிறது. 969 எம்.எல்.டி. நேரடியாக குழாய்கள் மூலமாகவும், 31 எம்.எல்.டி. லாரிகள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. 745 எம்.எல்.டி. அளவிற்குதான் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. புதிதாக 350 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. கொடுங்கையூர், பெரும்பாக்கத்தில் பணிகள் நடக்கின்றன. நெசப்பாக்கத்தில் பணிகள் முடிவடைந்துவிட்டன.

சென்னைக்கு 13.22 டி.எம்.சி. குடிநீர் அளவு தண்ணீர் இருப்பில் இருக்க வேண்டும். தற்போது 8.74 டி.எம்.சி. அளவு அதாவது 66 சதவீதம் தண்ணீர் உள்ளது. சென்னையில் குடிநீர் பிரச்சினை வராத அளவுக்கு செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இடங்களில் நீர் வரத்து சரியாக உள்ளது.

சென்னை வடிகால் அளவு

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களுக்கான இணைப்பு சரியாக இருக்கவில்லை. எனவே நீர் வெளியேற்றம் சரிவர நடக்கவில்லை. எனவேதான் தண்ணீர் தேக்கம் இருந்தது. இதையெல்லாம் நாங்கள் ஐ.ஐ.டி.யிடம் கொடுத்து வடிவமைத்தோம். அதற்கான பணிகளையும், கால அளவையும் டெண்டர் மூலம் நிர்ணயித்து அளித்துள்ளோம். உரிய காலத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிடும்.

சென்னை மாநகராட்சி உருவாகி 332 ஆண்டுகளாகி தற்போது அதன் மழைநீர் வடிகாலின் அளவு 2,078 கி.மீ. நீளமாக உள்ளது. ஆனால் இந்த ஓராண்டில் மட்டும் புதிதாக கட்ட இருக்கிற மழைநீர் வடிகாலின் அளவு 1,058 கி.மீ. நீளமாகும். ஏற்கனவே இருக்கும் 1,055 கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் 5 மாதங்களுக்கு முன்பதாகவே தூர்வாரும் பணிகளை தொடங்கிவிட்டோம்.

நீர் தேங்கும் இடங்கள்

தியாகராயநகர் பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, மேடவாக்கம் சாலை ஆகிய இடங்களில் நீர்வளத் துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பணிகள் செப்டம்பரில் முடிந்துவிடும்.

சென்னையில் மழைநீர் தேங்கும் இடமாக 564 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நிரந்தர தீர்வுக்காக வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகளுக்கு ஏற்ப பல்வேறு காலகட்டங்களில் அந்தப் பணிகள் நிறைவு பெறும். அப்போது இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்

ஆய்வு

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள், கட்டணமில்லா கழிப்பிடம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


Next Story