ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்தது


ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைவெள்ளம் புகுந்தது. மழைநீரை உடனே அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைவெள்ளம் புகுந்தது. மழைநீரை உடனே அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சியில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக செட்டிக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் இந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பயன் பெறுகிறார்கள். இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் இதை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மழைநீர் தேங்கியது

இந்த நிலையில் செட்டிக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள்ளும் மழைநீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து அனைத்து பொருட்களையும் ஊழியர்கள், பொதுமக்களின் உதவியுடன் அருகில் இருக்கும் நூலகத்திற்கு மாற்றி உள்ளனர்.

மழைநீர் தேங்கியது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story