செந்துறை அருகே ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீர்
செந்துறை அருகே ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீரால் அரிசி மூட்டைகள் நனைந்து வீணானது.
நத்தம் அருகே அரவங்குறிச்சியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் கட்டிட சுவர்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அரவங்குறிச்சியில் கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதேபோல் அங்குள்ள ரேஷன் கடை பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்தன. அதேபோல் ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்டவையும் மழையில் நனைந்தன.
இதையடுத்து நேற்று காலை மழையில் நனைந்த பொருட்களை காயவைக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் கடையில் இருந்த பொருட்களை அங்கிருந்து வாகனங்கள் மூலம் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு கொண்டு சென்றனர். அரவங்குறிச்சி ரேஷன் கடையில் இதுபோன்று மழையில் பொருட்கள் நனைவது தொடர்கதையாக உள்ளது. எனவே புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.