மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் பிரம்மதேசம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும்  பிரம்மதேசம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 3 Oct 2022 1:00 AM IST (Updated: 3 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

விழுப்புரம்

மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரம்மதேசம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

அறிக்கை

காந்தி ஜெயந்தியையொட்டி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி கிராமசபை கூட்டம் செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து குடிநீர் வசதி, கைப்பந்து, விசைப்பம்பு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், மின்சார வசதி பொது நிதியில் எடுக்கப்பட்ட மூலதனப் பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரம் மற்றும் இதர நிர்வாக அறிக்கை மற்றும் இதர விவரங்கள் பொதுமக்களுக்கு படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டில் ஊராட்சி பகுதியில் மத்திய மாநில அரசு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பு

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். மழை நீர் சேகரிப்பு அமைப்பு அடைப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்திட வேண்டும். ஊரகப்பகுதியில் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் தெளிந்த நீர் தொட்டி, பயன்பாடற்ற பானைகள், குளிர்சாதன பெட்டி பின்புறம், பழைய டயர், தேங்காய் மட்டைகள், செடிகள் வளரும் தொட்டி ஆகியவற்றில் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசைகள் அமைத்து குடியிருப்போர் தொடர்பாக கணக்கெடுப்பு பணி முடிவு பெற்று அதன் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது.

பிரசாரம்

மேலும் விடுபட்ட குடிசைகள் ஏதேனும் இருப்பின் அவற்றின் விவரம் குறித்து முறைப்படி அறிக்கை அனுப்பி இறுதி அறிக்கை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தமிழக அரசால் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை தனிநபர் சுகாதார மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு நம்ம ஊரு சூப்பர் என்ற சிறப்பு பிரசாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் பல்வேறு சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் இணை இயக்குனர் வேளாண்மை சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், துணை இயக்குனர் சண்முகசுந்தரம், உதவி இயக்குனர் சூர்யா, செயற்பொறியாளர் விஸ்வநாதன், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ராஜலட்சுமி, பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, அந்தியூர் தாசில்தார் தாமோதரன், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story