சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.
கோவில் நகரம்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. ஆன்மிக நகரமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக மாநகர பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்கள் மூலமாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நுழைவு வாசல்கள்
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கும், மாநகர பஸ் நிலையத்திற்கும் ஒருவழியாக பஸ்கள் வந்து, மற்றொரு வழியாக பஸ்கள் செல்லும் வகையில் தலா 2 நுழைவு வாசல்கள் உள்ளன. இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தின் அருகில் நாகை, திருவாரூர் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே மாநகர பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை பல மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த சாலையின் வழியாக தான் ஏராளமான வாகனங்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.. தற்போது அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குளம் போல் காணப்படும் சாலை
மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் சாலை எது? பள்ளம் எது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது..
போக்குவரத்துக்கு தடை
இந்த வழியாக சென்ற முதியவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்தார். இதை தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்றனர்.