மழைநீர் வடிகால்கள் பராமரிப்பதில் அலட்சியம்
உடுமலையில் மழைநீர் வடிகால்கள் பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.இதனால் சுகாதார சீ்ர்கேடு ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் தேங்கி நிற்கிறது
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கொண்டு செல்லும் வகையிலும் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாகவும் கால்வாய்கள் அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின்பு அவற்றை முறையாக தூர்வாரி பராமரிப்பு செய்வதற்கு முன்வரவில்லை.
இதனால் அவை மண் நிறைந்து காணப்படுவதுடன் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கியும் வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடும், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற பொதுமக்களும், அங்கு கடைகள் அமைத்துள்ள உரிமையாளர்களும், அதில் பணிபுரியும் பணியாளர்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மழைநீர் வடிகால்கள் பராமரிப்பதில் அலட்சியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சுற்றுப்புற சுகாதாரத்தோடு உடல் நலனை காப்பதில் கழிவுநீர் கால்வாய்களின் பங்கு முக்கியமானதாகும். அதை உணர்ந்துதான் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் கால்வாய்கள் கட்டப்பட்டு உள்ளது. அவற்றில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் மண் தேங்கி வருவதால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளோடு ஆங்காங்கே பசுமை போர்த்தியவாறு பாசிபடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து எழுகின்ற துர்நாற்றம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது.
அத்துடன் கொசுக்கள் உற்பத்திக்கும் வழிவகை செய்து வருகிறது. அதை புதுப்பித்து சீரான முறையில் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் வழிந்து செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர்.எனவே உடுமலை நகரப் பகுதியில் தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வாரியும், சேதமடைந்து உள்ளதை புதுப்பிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.