மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா: தஞ்சை பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அமமனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. திருமுறை தேவார பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அமமனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. திருமுறை தேவார பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சதய விழா
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் 2 நாட்கள் நடைபெறும் இந்த சதய விழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒரு நாள் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 1037-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு நடந்தது.
கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை
நேற்று 2-வது நாள் நிகழ்ச்சியையொட்டி காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது சிவ பூத இசை வாத்தியங்களை இசைத்தபடி சிவனடியார்கள் வந்தனர். அதன் பின்னே பெரியகோவிலின் மாதிரி தோற்றம் லாரியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 48 ஓதுவார்கள் தேவாரம் பாடியபடி வந்தனர்.
சிலைக்கு மாலை அணிவிப்பு
ஊர்வலம், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையை அடைந்ததும் அங்கு சிலைக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழாக்குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன்-லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர். அப்போது ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைக்கு ராஜா, ராணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
48 வகையான அபிஷேகம்
அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது.
உள்ளூர் விடுமுறை
சதய விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து தஞ்சை மாநகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சதய விழாவையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டு இருந்தது.
அன்னதானம்
மாமன்னர் ராஜராஜசோழன் சதய விழாவையொட்டி தஞ்சை காபி பேலஸ் ஓட்டல் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.