ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்


ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ராஜகோபாலசாமி கோவில்

தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவ திவ்ய தேசங்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம் பிரசித்தி பெற்ற வெண்ணெய்தாழி உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி நவநீத சேவையில் பல்லக்கில் வீதி உலா சென்ற ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் வீசி வழிபட்டனர். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம்

நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பாமா, ருக்மணி சமேதராக கல்யாண கோலத்தில் ராஜகோபாலன் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளையும் வலம் வந்து தேர் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் ராஜகோபாலனை வழிபட்டனர்.


Next Story