உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை இறந்தது
எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை இறந்தது
சமயபுரம், ஜூலை. 31-
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு சந்தியா, இந்து, ஜெயந்தி, மல்லாச்சி, கோமதி, இந்திரா, ரூபாலி, ஜமீலா, ரோகிணி ஆகிய பெயர் கொண்ட 9 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானை ரோகிணி கடந்த 6 மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அந்த யானை சிகிச்சை பலன் இன்றி இறந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், வன அலுவலர்கள் முன்னிலையில் யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
பின்னர் மறுவாழ்வு மையத்திலேயே 12 அடி அகலம், 12 அடி நீளம், 12 அடி ஆழம் கொண்ட குழி வெட்டப்பட்டு உப்பு, சுண்ணாம்பு, மஞ்சள் பொடி, பூக்கள் யானையின் மீது தூவப்பட்டு கிரேன் மூலம் தூக்கி குழிக்குள் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு யானை இறந்ததால் தற்போது, 8 யானைகள் மட்டுமே உள்ளன. உயிரிழந்த யானை ரோகிணிக்கு வயது 26. இந்த யானை கடந்த 6 மாதத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாரால் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.