மாசு இல்லாத நகரமாக ராஜபாளையம் உருவாக்கப்படும்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்


மாசு இல்லாத நகரமாக ராஜபாளையம் உருவாக்கப்படும்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் மாசு இல்லாத நகரமாக ராஜபாளையம் உருவாக்கப்படும் என அமைச்சர் ெமய்யநாதன் கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் மாசு இல்லாத நகரமாக ராஜபாளையம் உருவாக்கப்படும் என அமைச்சர் ெமய்யநாதன் கூறினார்.

கருத்தரங்கு

தமிழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் இந்த கருத்தரங்கம் நடந்து வருகிறது. இது கார்பன் நியூட்ரல் அடிப்படையில் நடக்கிறது. இதன்படி ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மண்டபத்தில் கார்பன் சமநிலை ராஜபாளையம் என்ற புதிய திட்ட தொடக்க விழா நடந்தது.

திட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகி, கலெக்டர் ஜெயசீலன், காலநிலை மாற்றத்துறை இயக்குனர் தீபக் பீல் ஜி, தனுஷ் குமார் எம்.பி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கால நிலைக்கு ஏற்ப எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கார்பன் சமநிலை என்னும் புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு அடிப்படை அளவில் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். மாநிலத்தில் 38 மாவட்டங்களிலும் காலநிலை மாற்ற இயக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை தேர்ந்தெடுத்து கார்பன் சமப்படுத்தப்பட்ட காலநிலை செயல் திட்டங்களை உருவாக்கப்படும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கார்பன் சமநிலை பயிற்சி பட்டறைக்கு பிறகு ராஜபாளையத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

மேற்கு தொடர்ச்சி மலை

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழ்நாடு புதிய பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அரவணைப்பில் உள்ள ராஜபாளையத்தில் தற்போது பயிலரங்கம் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இங்குள்ள சஞ்சீவி மலை நல்ல சுற்றுச்சூழல் மையமாக அமைந்துள்ளது என்றார்.

அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், வருகிற 2030-க்குள் கார்பன் அளவை 43 சதவீதம் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாக்குதல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. இதை செயல்படுத்த இந்தியாவில் எந்த மாநிலமும் எடுக்காத நிலையில் தமிழக அரசு எடுத்துள்ளது. ஏனெனில் இப்பகுதியில் உள்ள மரங்கள் 22 கிலோ கார்பனை உட்கொண்டு 20 கிலோ ஆக்சிஜனை வெளியிடும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளதால் இத்திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டது. கார்பன் மாசு இல்லாத நகரமாக ராஜபாளையம் உருவாக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழ்நாடு காலநிலை ஆளுமை குழு உறுப்பினர் நிர்மலா ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story