ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழா


கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழா நடந்தது.

அரியலூர்

ஆடித்திருவாதிரை விழா

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித்திருவாதிரை விழா மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), சின்னப்பா (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசும்போது கூறியதாவது:-

ராணுவ கட்டமைப்பு

வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்த வெற்றியின் மேன்மையாக கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி ஆட்சியை நிர்வகித்த பேரரசர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப்படுகின்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் உதித்த நாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித்திருவாதிரை விழாவாக கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

ராஜராஜ சோழன் காலத்திலேயே இளைய அரசராக பொறுப்பேற்று பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றியை பெற்றவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். ராஜேந்திர சோழன் பல வெற்றிகளை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய ராணுவ கட்டமைப்பாகும். அதற்கு சான்றாக அமைந்ததுதான் இந்த கங்கைகொண்ட சோழபுரம். மேலும் கடற்படை வைத்திருந்த ஒரே மாமன்னன் ராஜேந்திர சோழன் தான். கடலின் நீரோட்ட பாதைகளை நன்கு அறிந்த மதிநுட்பம் உடையவர் என வரலாறு குறிப்பிடுகிறது. அதனால்தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினார்.

அருங்காட்சியகம்

இது நமது மண்ணிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையாக கருதப்படுகிறது. சோழப்பேரரசு மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் பொற்காலமாக திகழ்ந்தது. இதன் மூலம் இந்திய நாட்டினை கடந்து அயல்நாடுகளுக்கு சென்று இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வென்று அங்கு தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆவார். இவருடைய சிறப்பான ஆட்சிக்காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அந்த காலத்திலேயே பெண்களை சமமாக கருதும் உயரிய சிந்தனை கொண்டவர் என வரலாறு கூறுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததின்படி அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் அகழாய்வு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அகழாய்வுகளில் பலவிதமான பண்டைய நாகரிகங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலை நிகழ்ச்சிகள்

இதையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story