உடுமலை ராஜேந்திரா ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
உடுமலை ராஜேந்திரா ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழியில்லாமல் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய வழித்தடம்
கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை மத்திய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியிலிருந்து பிரியும் ரோடு ராஜேந்திரா ரோடு ஆகும்.
இந்த ரோட்டில் தினசரி சந்தை, மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், கேந்திரிய வித்யாலயாபள்ளி, அரசுப்பள்ளிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. மேலும் அமராவதி, திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இந்த ரோடு உள்ளது. இதுதவிர ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகள் இந்த ரோட்டில் உள்ளது.இங்குள்ள தினசரி சந்தையிலுள்ள கமிஷன் மண்டிகள் மூலமாக விவசாயிகளின் காய்கறிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தினசரி சந்தைக்குள் காய்கறிகள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் ராஜேந்திரா ரோடு மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலும் காய்கறி ஏற்றி வரும் லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. இதுவே இந்த பகுதியின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகிறது.
இதுதவிர தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு அத்துமீறி ரோட்டை ஆக்கிரமிக்கும் ஒருசில வியாபாரிகளும் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகிறார்கள். எனவே அடிக்கடி இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
மாணவர்கள் அவதி
ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியர்கள் இந்த ரோட்டில் குவிகின்றனர். இதில் பலரும் வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். அந்தவகையில் நேற்று காலை கிட்டத்தட்ட ரோட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் காய்கறிகளை ஏற்றி வந்த வாகனங்களால் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த நெரிசலில் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கிக் கொண்டது. உடனடியாக அருகிலுள்ள வியாபாரிகள் களமிறங்கி போக்குவரத்து நெரிசலை சீரமைத்து ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அவசர சிகிச்சை தேவைப்படும் நபருக்கு ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது என்பார்கள்.
ஒரு சிலரின் அலட்சியப் போக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ரயிலுக்கு அவசரமாக செல்லும் பயணிகள், பஸ்சுக்கு அவசரமாக வரும் பயணிகள், பள்ளிக்கு அவசரமாக செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ராஜேந்திரா ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.