சொந்த ஊரான நாச்சிகுப்பத்தில் ரஜினிகாந்த் அண்ணன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு தொடக்கம்
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊராகும். அங்கு ரஜினிகாந்தின் பெற்றோர் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் முதல் முறையாக தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை இலங்கையை சேர்ந்த பிரிலியண்ட் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு `மாம்பழ திருடி' என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த ரஜிம் படத்தை இயக்குகிறார். இலங்கையை சேர்ந்த மதன் கதாநாயகனாகவும், சென்னையை சேர்ந்த லிபியா ஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியநாராயண ராவ் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே நாச்சிகுப்பத்தில் உள்ள ரஜினிகாந்தின் பெற்றோர் நினைவிடத்தில் நேற்று பூஜையுடன் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சத்தியநாராயண ராவ், இயக்குனர் மற்றும் நடிகர், நடிகை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த சினிமா படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி போன்ற இடங்களில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.