சிலுவம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


சிலுவம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x

நாமக்கல் அருகே சிலுவம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

நாமக்கல் அருகே சிலுவம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல் அருகே உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" என்ற சுகாதார விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சுகாதார விழிப்புணர்வு ரதத்துடன் ஊர்வலம் நடந்தது. இதனை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் அந்த பகுதியில் சாலையோரம் கிடந்த குப்பைகளை கலெக்டர் அகற்றினார். அப்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.

கலெக்டர் பேச்சு

பின்னர் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை பொது இடங்களில் வைத்து தீ வைத்து எரிக்க கூடாது.

ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பொறுப்புணர்வுடன் பராமரிக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துண்டு பிரசுரங்கள் வினியோகம்

இதையடுத்து அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கு சென்று "நம்ம ஊரு சூப்பரு" திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story