தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு ஊர்வலம்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேன்கனிக்கோட்டையில் நேற்று இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். தேன்கனிக்கோட்டை கோட்டை வாசலில் இந்த ஊர்வலத்தை செல்லக்குமார் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார். ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் செல்லக்குமார் எம்.பி. முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, காங்கிரசில் தங்களை இணைத்து கொண்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் தேன்கு அன்வர், மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரீஷ்பாபு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், ஜேசு துரைராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.சி.சேகர் மற்றும் முனுசாமிரெட்டி, அஞ்செட்டி பர்க்கத், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.