சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: நெய்வேலியில் என்.எல்.சி.யை கண்டித்து பேரணி வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
என்.எல்.சி. நிறுவனம் சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், நெய்வேலியில் என்.எல்.சி. மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேரணி நடத்தப்படுகிறது என்று கடலூரில் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு மற்றும் அனைத்துக்கட்சி கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கவனிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். கையகப்படுத்தப்படும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.1 கோடி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வி.சி.க. மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாநகராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், அருள்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
26-ந் தேதி போராட்டம்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 53 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி மின் உற்பத்தி செய்து, பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. நிலத்தை பறிகொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. நிரந்தர வேலையும் வழங்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே என்.எல்.சி. நிறுவனத்திற்கு நில எடுப்பால் பாதிக்கப்பட்டு, மீண்டும் பாதிக்கப்பட உள்ளவர்களுக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்கிட வேண்டும். புதிதாக நிலம் எடுக்க உள்ளவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும். மேலும் மாற்றுக்குடியிருப்புக்கான ஏற்பாடுகள் செய்யாமல் நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு எடுத்த, எடுக்க உள்ள நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். நிலம் மற்றும் வீட்டுமனைக்கு நஷ்டஈடு, வேலைவாய்ப்பு, மாற்று மனை வழங்க தமிழக அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், என்.எல்.சி. மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வருகிற 26-ந் தேதி நெய்வேலியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.