ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்


ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. புதுக்கோட்டையில் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் சிறுவர், சிறுமிகளும் கட்டித்தழுவி அன்பை பரிமாறினர். பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணிகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும் தங்களது வீடுகளில் பிரியாணி சமைத்து சாப்பிட்டனர். ஓட்டல்களிலும் பிரியாணி விற்பனை களைக்கட்டியது.

மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும், 30 இடங்களில் திறந்தவெளிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்

இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், மாங்குடி, பெருமநாடு, புல்வயல் உள்ளிட்ட இடங்களில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, இலுப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான முஸ்லிம்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திடல் பகுதிகளில் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதுபோல் சிறுவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஆலங்குடி, மணமேல்குடி

ஆலங்குடி, கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகர் ஜும்மா பள்ளி வாசலில் ஜமாத்தார்களால் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மணமேல்குடி நகர பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

இதேேபால் திருமயம் காட்டுபாவா பள்ளிவாசல், கோட்டைப்பட்டினம் பள்ளிவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கீரனூர், பொன்னமராவதி, திருவரங்குளம்

கீரனூர் பகுதி முஸ்லிம்கள் திருச்சி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பொன்னமராவதி இந்திரா நகர், பொன்-புதுப்பட்டி, கேசராபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, பூவரசகுடி, வல்லத்திராக்கோட்டை, முத்துப்பட்டினம், குலவாய்ப்பட்டி, மழவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.


Next Story