செங்கோட்டையில் ரம்ஜான் தொழுகை
செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை சுலைமான் நபி ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பேஷிமாம் செய்யது சுல்தான் பைஜி தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார். ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி, செயலாளர் முகம்மது இஸ்மாயில் உள்பட ஏராளமானவர்கள் கொண்டனர்.
சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் குர்ரான் ஓதும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சுலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத் தக்வா அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் ஏழைகளுக்கு பித்ரா அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
மஸ்ஜிதுன்நூர் ஜூம்மா பள்ளிவாசலில் பேஷிமாம் அபுபக்கர் சித்திக்கும், மேலூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் பேஷிமாம் அக்பர் அலியும், காதர்ஒலி ஷாபி ஜூம்மா பள்ளிவாசலில் பேஷிமாம் நிஜாமுதீனும் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், காசுக்கடைபஜார் தவ்ஹீத் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு அரிசி மற்றும் நிதி உதவி வழங்கினர்.