9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் மோடிக்கு, ராமதாஸ் கடிதம்


9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் மோடிக்கு, ராமதாஸ் கடிதம்
x

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி, 9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

1993-ம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் இயற்றப்பட்டு, அதனடிப்படையில் 18.08.1993 முதல் 16.09.2016 வரை மொத்தம் 7 ஆணையங்கள் செயல்பாட்டில் இருந்துள்ளன. 8-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 28.02.2019 அன்று அமைக்கப்பட்டது. இது கடந்த மார்ச் 8-ந்தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின்னர் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்காக ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை பெறுவதற்காக கிரீமிலேயர் வரம்பு இப்போது ரூ.8 லட்சமாக உள்ளது. இந்த வரம்பு 2020-ம் ஆண்டே உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது இந்த வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

ஓ.பி.சி. உள் இடஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ரோகிணி ஆணையம், அதன் முடிவுகளை இறுதி செய்வதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உதவியும், வழிகாட்டுதலும் தேவை.

அமைக்க வேண்டும்

இவ்வாறாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணிகள் மிகவும் முக்கியமாக தேவைப்படும் சூழலில், ஆணையம் காலாவதியாகிருப்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்காது. ஆணையத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி, 9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கு கேபினட் மந்திரி இணையான தகுதி வழங்க வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் 60 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப வேண்டும். நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை எளிதில் அணுக வசதியாக சென்னை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆணையத்தின் மண்டல அலுவலகங்களைத் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story