ராமஜெயம் கொலை வழக்கு - திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்


ராமஜெயம் கொலை வழக்கு - திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்
x

ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சென்னை,

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணைரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்று இருந்தனர்.

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அதே மாடல் கார்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தி வந்த உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் திட்டமிட்டனர். இவர்கள் 12 பேரும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரிய ரவுடிகள் 12 பேரும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர்.


Next Story