ராமபிரான் குடில் அமைத்து தங்கிய கோவில்பாளையம் ராமசாமி கோவில்


ராமபிரான் குடில் அமைத்து தங்கிய கோவில்பாளையம் ராமசாமி கோவில்
x
திருப்பூர்


பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ராமபிரான் குடில் அமைத்து தங்கிய ராமசாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் அதிக அளவு வருகிறார்கள்.

ராமசாமி கோவில்

பொங்கலூர் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோவில்பாளையத்தில் ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கோவில் உள்ள இடத்தில் ராமபிரான் தங்கி சென்றதாக கூறப்படுகிறது. கோவில் தல வரலாறு வருமாறு:-

ராமகாதையில் சீதையை தேடி ராமபிரான், அவருடைய தம்பி லட்சுமணன் ஆகியோர் ஆந்திரா வழியாக இந்த பகுதிக்கு வந்ததாகவும், பின்னர் கோவில் உள்ள இடத்தில் குடில் அமைத்து தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ராமபிரானும், அவருடைய தம்பி லட்சுமணனும் குடில் அமைத்து தங்கி இருந்த இடம் மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது.

அப்போது அந்த இடத்தில் மண் புற்று ஒன்று உருவாகியுள்ளது. இங்குள்ள புற்களை மேய்வதற்கு வரும் மாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போது மாட்டின் மடியில் இருந்து பால் தானாக சுரந்துள்ளது. மாடு மேய்ப்பவர்களும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில் அந்த மாடு மேய்ப்பவர்கள் கனவில் ராமபிரான் தோன்றி தனக்கு இங்கு கோவில் ஒன்று அமைக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதன் அடிப்படையில் மண் புற்று இருந்த இடத்தில் பச்சை மண்ணை எடுத்து ராமபிரான், லட்சுமணன், சீதாபிராட்டி, கன்னிமார் சிலைகள் செய்துள்ளனர். பின்னர் சிலைகளை சுடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தபோது, மறுநாள் காலையில் வந்து சிலைகளை சுடும் பணியில் ஈடுபடலாம் என்று சாமி சிலைகளை அங்கேயே வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

கோவிலில் பூஜை

அன்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆனால் சிலை இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் போனதாகவும், அந்த சிலைகள் அனைத்தும் அப்படியே பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. காலையில் வந்து பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக அந்த சிலைகளை எடுத்து அந்த புற்று இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில்பாளையத்தை சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பத்தினர் பூஜை செய்து வந்துள்ளனர். மேலும் கோவில் திருநீறாக சாம்பல் மட்டுமே வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பின்னாளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வந்து வழிபட தொடங்கினார்கள். இதனால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியது.

கோவிலின் உள்ளே உள்ள சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது.

கோவில் நேர் எதிரே உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் உள்ள வடக்கு விநாயகர் மற்றும் நாகநாதசுவாமிக்கு உப்பு, மிளகு, கன்னடக்கம் ஆகியவை காணிக்கையாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் போது கண்பார்வை குறைபாடு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். குறிப்பாக, கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்தும், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு இந்தக் கோவிலை சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்கள் பூஜை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை வசம் இந்த கோவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புரட்டாசி மாதத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ குழு, தீயணைப்புத்துறை வசதி ஆகிய சிறப்பான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.எம். கிருஷ்ணகுமார் தலைமையில் செய்யப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமபிரான் வந்து சென்ற இடம் என்பதால் இந்த கோவில் கிராமத்து வழக்கப்படி ராமசாமி கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.


Next Story