இலங்கை கடற்படை தாக்குதலால் கண்ணில் பலத்த காயம் அடைந்த ராமேசுவரம் மீனவர்
இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்தபோது 2 ரோந்துக்கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்து தாக்குதல் நடத்தினர். அவ்வாறு தாக்கப்பட்ட மீனவர்கள் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
மீனவரின் கண்ணில் காயம்
சம்பவத்தன்று அந்தோணியார் அடிமை என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 48), மலைச்சாமி, ஸ்டீபன், அந்தோணி பிச்சை உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்களின் மீன்பிடி படகில் ஏறி, 8 பேரையும் கடுமையாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தாக்குதலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான்சனின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்ணின் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் ஜான்சன் கூறியதாவது:-
இலங்கை கடற்படை வீரர்கள் 5 பேர் எங்கள் படகில் ஏறி தாக்கி, மீன்களை அள்ளி சென்றனர். ஜி.பி.எஸ். கருவிகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். உயிருக்கு பயந்து கரை திரும்பினோம். எனக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறும் ேபாது, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். கண் பார்வை பாதிக்கப்பட்ட மீனவர் ஜான்சனுக்கு ராதிகா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.