ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்


ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்
x

காரல், சூடை, சங்காயம் மீன்களின் விலை குறைவால் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானம். தமிழகத்திலேயே அதிக விசைபடகுகளும், நாட்டுப்படகுகளும் உள்ள பகுதி ராமேசுவரம்.

கிட்டத்தட்ட 800-க்கும் அதிகமான விசைப்படகுகளில் அங்கிருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இறால், நண்டு, கணவாய், சூடை, சங்காயம், காரல் உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைக்கும். அதிலும் சூடை, சங்காயம், காரல் வகை மீன்களின் விலையை மீன் வியாபாரிகள் குறைந்துள்ளதால் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இதனால் கரையோர கடல் பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா கூறியதாவது:-

இயற்கையாகவே பாக்ஜலசந்தி கடலானது சேறும், சிப்பிகளும் நிறைந்தது. இதுேபான்ற கடல் பகுதியில் சூடை, சங்காயம், காரல் உள்ளிட்ட வகை மீன்களே அதிகம் கிடைக்கும். இந்த வகை மீன்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும். பருவமழை சீசனில்தான் மற்ற வகை பெரிய மீன்கள் ஓரளவு கிடைக்கும்.

சூடை, சங்காயம், காரல் மீன்கள் அதிக அளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. சங்காயம் மீன்கள் தூத்துக்குடியில் உள்ள கம்பெனிக்கு அனுப்பப்பட்டு, மீன் எண்ணெய் எடுக்கப்பட்டு மருந்து பொருட்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ேமலும் அரைத்து பவுடர் ஆக்கப்பட்டு கோழி தீவனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிற மாநிலங்களில் இருந்து இந்த வகை மீன்கள் வரத்து கேரளாவுக்கு தற்ேபாது அதிகம் உள்ளதால் சூடை, சங்காயம், காரல் வகை மீன்கள் விலை போகவில்லை.

30 ரூபாய்க்கு விலை போன சூடை ஒரு கிலோ தற்போது ரூ.25-க்கு விலை போகிறது. ரூ.23-க்கு விலை போன சங்காயம் ரூ.17-ஆக குறைந்திருக்கிறது. ரூ.30-க்கு விலை போன காரல்ரூ.22-க்கு விற்பனையாகிது. ரூ.150 வரை விற்கப்பட்ட நகரை ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவினால்தான் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்


Related Tags :
Next Story