ராமேசுவரம் கோவில் நகை எடை குறைவுக்கான தொகையை பணியாளர்களிடம் வசூலிக்க தடை


ராமேசுவரம் கோவில் நகை எடை குறைவுக்கான தொகையை பணியாளர்களிடம் வசூலிக்க தடை
x

ராமேசுவரம் கோவில் நகைகளின் எடை குறைந்ததற்கான தொகையை பணியாளர்களிடம் வசூலிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

ராமேசுவரம் கோவில் நகைகளின் எடை குறைந்ததற்கான தொகையை பணியாளர்களிடம் வசூலிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மறுமதிப்பீடு

ராமேசுவரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் குருக்களாக பணியாற்றுகிறேன். கோவிலுக்கு சொந்தமான தங்கம், வெள்ளி பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.

அதில், நகைகளின் எடை அளவு குறைந்துள்ளதாகவும், இதற்கு உரிய தொகையான ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 964-ஐ கோவிலில் நகைகளை கையாண்ட பணியாளர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்துமாறு ராமநாதசுவாமி தேவஸ்தான செயல் அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

புராதன தங்க நகைகள், வெள்ளி கவசங்கள், மற்றும் பூஜை பொருட்கள் தினசரி பூஜை மற்றும் திருவிழா காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு அதிகாரிகளின் மேற்பார்வையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

தினசரி மற்றும் திருவிழா கால பயன்பாட்டால் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. இதை கருத்தில் கொண்டு நகைகள் தேய்மானத்திற்கு உரிய தொகையை எங்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இதேபோல மேலும் 19 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தடை விதிப்பு

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி முகம்மது ஷபீக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் கார்த்திகேய வெங்கடாசலபதி, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் கோவில் நகைகளில் தேய்மானத்திற்கு பணியாளர்களிடம் தொகை வசூலிப்பது என்பது சட்டவிரோதம். தேவஸ்தானத்தின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

முடிவில், இதுதொடர்பாக ராமேசுவரம் கோவில் செயல் அலுவலர் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு வைத்தார்.


Related Tags :
Next Story