இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம்

தாராபுரம், காங்கயம், வெள்ளகோவிலில் பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜானை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரம்ஜான் பண்டிகை
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் அதிகாலை 4 மணிக்கு விரதம் தொடங்கி மாலை 6 மணிக்கு நோன்பு என்னும் விரதத்தை முடித்துக் கொள்ளுவது வழக்கம். விரதத்தின் போது காலை மாலை என இரு வேளைகளில் இறைவனை தொழுது வந்தனர். இஸ்லாமியர்கள் நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்ட மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டினர்.
சிறப்பு தொழுகை
அந்த வகையில், நேற்று தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் புனித ரமலான் தினமான நேற்று இறைச்சி மஸ்தான் ஈத்கா வளாகத்தில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விழாவின் போது ஆடு வெட்டி பிரியாணி சமைத்து உண்டும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல், தாராபுரம் நகர் மற்றும் புறநகர் அலங்கியம், தளவாய்பட்டிணம், டி.காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள 14 பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகையில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தாராபுரத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகையில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் காங்கயத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சமூகத்தினர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். இதையொட்டி காங்கயம் பஸ் நிலையம் அருகே காமராஜர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நேற்று காலை 10.30 மணியளவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகையில் கலந்துகொண்டனர். முழு உலகத்திலும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று இஸ்லாமிய சமூகத்தினர் பாத்தியா துவா மேற்கொண்டனர்.
தொழுகை முடிந்த பின் அமைதியையும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஏழை எளியோருக்கு உதவுவதை வலியுறுத்தும் பொருட்டு ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் பணம் பொருட்கள் வழங்கினர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கு பிரியாணி வழங்கி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் மசூதியில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.