ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
உடுமலை பகுதி பள்ளி வாசல்களில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் ேநான்பு
இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவது ரம்ஜான் நோன்பு. இஸ்லாமிய நம்பிக்கையின் படி இறைதூதரான முகம்மது நபிக்கு முதன்முதலில் புனித நூலான குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவு கூறும் விதமாக இந்த நோன்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் ரம்ஜான் நோன்பானது இஸ்லாமியத்தின் 5 கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் 9- வது மாதமான ரம்ஜான் முதல் நாள் அன்று நோன்பு தொடங்கி பிறை காட்சிப்படியும் வாழ்க்கை வரலாறுகளின் படியும் 29 முதல் 30 நாட்கள் வரை மேற்கொள்ளப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மார்ச் மாதம் 24 -ந்தேதி தொடங்கியது. இஸ்லாமியர்கள் விடியற்காலை முதல் சூரியன் மறையும் வரை உணவு, தண்ணீர், திரவ ஆகாரங்களை தவிர்த்து ஐம்புலன்களை அடக்கி நோன்பு மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி நாள்தோறும் பள்ளிவாசல்களில் நடைபெறும் 5 வேளை தொழுகைகளில் கலந்து கொண்டு குரானை வாசித்து வழிபாடு செய்தனர்.
நோன்பையொட்டி மாலை வேளையில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 28 நாட்கள் நோன்பு மேற்கொண்டு வந்த நிலையில் 29 -ம் நாளான நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடைகளை உடுத்தி பண்டிகை கொண்டாடியதுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்புடன் கலந்த மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
ரம்ஜான் ஊர்வலம்
நோன்பை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்கள். அதைத் தொடர்ந்து குட்டை திடல் அருகே உள்ள ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து ரம்ஜான் ஊர்வலம் தொடங்கியது.
தளிரோடு பொள்ளாச்சிரோடு வழியாக இறைவனை வேண்டியவாறு சென்ற ஊர்வலம் கொல்லம் பட்டறை அருகே உள்ள பூர்வீக பள்ளிவாசலில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அனைவரும் தொழுகை செய்தனர். அதன் பின்பு வீடுகளுக்கு திரும்பிச் சென்ற இஸ்லாமியர்கள் தங்களால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்தனர். ரம்ஜான் ஊர்வலத்தையொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.