ரம்ஜான் சிறப்பு தொழுகை


ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

நோன்பு

'இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்' என்ற திருக்குர்ஆனின் வாசகங்களைப் பின்பற்றி முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கின்றனர்.

முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவு கூறும் விதமாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் பகல் பொழுதில் உணவு, தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல், இறை வழிபாட்டில் மட்டுமே மனத்தை செலுத்தி, மிக கடுமையாக ரமலான் நோன்பினை கடைபிடித்து வந்த முஸ்லிம்கள் நேற்று ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.

சிறப்பு பிரார்த்தனை

மடத்துக்குளத்தையடுத்த கணியூர், கடத்தூர், சோழமாதேவி, கொமரலிங்கம், ருத்ரா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களுக்குள் சகோதரத்துவத்தை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து அடக்க ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கணியூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் தலைமை இமாம் ஜாகிர் உசேன் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் இந்த நாளில் பிறருக்கு உதவி செய்வதையும், உணவளிப்பதையும் கடமையாகக்கொண்டு மதங்களைக் கடந்து அன்பையும் சகோதரத்துவத்தையும் பரிமாறிக் கொண்டனர்.


Next Story