ராமநவமியையொட்டிகடலூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ராமநவமியையொட்டி கடலூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன்கோவில் தெருவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் 101-வது ஆண்டு ராமநவமி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதாவது, ராமருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் நேற்று மாலை சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) சீதாகல்யாணம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 7 மணிக்கு நாத சங்கமம், 3-ந்தேதி ராமர் பட்டாபிஷேகம், புதுச்சேரி முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ சபையினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
4-ந்தேதி சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத கோதண்டராமர் சுவாமி பட்டாபிஷேக அலங்காரத்துடன் வீதி உலா உற்சவமும், தொடர்ந்து பாகவதர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந்தேதி விடையாற்றி உற்சவம், ஆண்டாள், ஆஞ்சநேயருக்கு உற்சவம், சிறப்பு பஜனையும், மாலை 6.30 மணிக்கு பரதநாட்டியம் மற்றும் இன்னிசை பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோதண்டராமர் சன்னதியிலும் ராமநவமி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சனமும், 5-ந்தேதி ராமர் திருக்கல்யாண உற்சவம், 9-ந்தேதி ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.