ரம்ஜான் பண்டிகை-திருமங்கலம் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் சந்தையில் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் நேற்று ஆடுகள் விற்பனையாகின.
திருமங்கலம்,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் சந்தையில் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் நேற்று ஆடுகள் விற்பனையாகின.
ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். தமிழகத்தின் 2-வது பெரிய ஆட்டுச் சந்தையாக கருதப்படும் இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வளர்ப்பு ஆடுகள் விற்பனை செய்யப்படும்.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டுச்சந்தையில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் காணப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விலை ேபானது.
ரூ.7 கோடிக்கு விற்பனை
நேற்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டதால், சந்தை வளாகமே களைகட்டி காணப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இடநெருக்கடியால் திணறும் திருமங்கலம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
ரம்ஜான் பண்டிகை என்பதால், இந்த வாரம் ஆடுகளின் விலை கூடுதலாக இருந்ததாகவும், அடுத்தவாரம் விலை வழக்கமாக இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.