கடையநல்லூர் பகுதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கடையநல்லூர் பகுதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 4 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் சாலையில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி குத்பா பிரசங்கம் செய்தார்.
கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாவும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லா உமரியும் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பேரூரையாற்றினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது.
நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர், ரகுமானியாபுரம், மக்கா நகர் பகுதிகளில் தொழுகை நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. சார்பில் இக்பால் நகர், மதினா நகர் பகுதிகளில் பெருநாள் தொழுகை நடத்தினர். சுன்னத்துவல் ஜமாத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது
கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. காயிதே மில்லத் திடலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை தாங்கி, பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை செயலாளர் அப்துல் பாசித் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.