ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்


ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்
x

வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர் வெள்ளோட்டம்

வந்தவாசி காந்தி சாலையில் அருகருகே ஜலகண்டேஸ்வரர் கோவில், ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள. இந்த 2 கோவில்களுக்கும் 2 மரத்தேர்கள் இருந்தன.

இதில் ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ரங்கநாத பெருமாள் கோவிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்.

இந்த 2 தேர்களும் சேதமடைந்ததால் சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து தமிழக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.60 லட்சம் நிதியுடன், பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து 2 புதிய தேர்களை செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கான புதிய தேர் செய்யும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து அந்தத் தேரின் வெள்ளோட்டம் வந்தவாசியில் இன்று நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், ரங்கநாத பெருமாள் கோவிலில் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் அருகிலிருந்து தேரை திரளான பக்தர்கள், இந்து இயக்க தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

காந்தி ரோடு, பஜார் வீதி, அச்சரப்பாக்கம் ரோடு, பாலுடையார் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாக தேர் சென்றது.

தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதால் நகர் முழுவதும் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

பக்தி சொற்பொழிவு

முன்னதாக ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வந்த ஸ்ரீமத் பாகவதம் தொடர் சொற்பொழிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிகள் அருளாசியுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவரது சீடரான ஸ்ரீநிவாஸன் சுவாமிகள் பங்கேற்று பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.

இதையொட்டி கோவில் மாட வீதியில் பஜனை ஊர்வலம், கோவில் வளாகத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் ருக்மிணி கல்யாணம் என்ற தலைப்பில் ஸ்ரீநிவாஸன் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருட்பிரகாச வள்ளலார் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.




Next Story