சேறும்,சகதியுமாக மாறிய வழித்தடம்


சேறும்,சகதியுமாக மாறிய வழித்தடம்
x
திருப்பூர்


குமரலிங்கம் பகுதியில் மழையால் சேறும் சகதியுமாக மாறிய வழித்தடத்தில் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

அமராவதி அணை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.மேலும் அமராவதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் குமரலிங்கம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் விளை நிலங்களுக்கு செல்லும் வழித்தடம் சேதமடைந்து மழை நீர் தேங்கியதால் சேறும் சகதியாக மாறியுள்ளதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.குமரலிங்கம் ராஜாவாய்க்காலுக்கு அருகிலுள்ள விளைநிலங்களுக்கு செல்லும் வழித்தடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

வாடகை எந்திரம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- விவசாயப் பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.எனவே பெருமளவில் எந்திரங்களை நம்பியே பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக உழவு, அறுவடை போன்ற பணிகளுக்கு வாடகை எந்திரங்களை வரவழைக்கிறோம். ஆனால் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் சேறு சேர்ந்து புதைகுழி போல காணப்படுவதால் வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்கின்றன.எனவே பலரும் இந்த பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் உரம், மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை கொண்டு சொல்வதிலும் கடும் சிரமங்கள் ஏற்படுகிறது. அடிக்கடி வாகனங்கள் பழுது ஏற்பட்டு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலும் இது ராஜவாய்க்கால் கரையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் மேட்டிலிருந்து இறங்கும் போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்களும் அடிக்கடி சேற்றில் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.


Next Story