பர்கூர் அருகே திருமணம் செய்வதாக கூறி 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்-உறவுக்கார வாலிபர் கைது
பர்கூர்:
பர்கூர் அருகே திருமணம் செய்வதாக கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 வயது சிறுமி
பர்கூர் அருகே உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22). இவர் குடும்ப தகராறு காரணமாக பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு, போச்சம்பள்ளி அருகே உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். மேலும் அங்கிருந்து தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்தார்.
ராஜ்குமாரின் அத்தை மகளான 14 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே ராஜ்குமார், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 28-ந் தேதி கடத்தி சென்றார்.
பாலியல் பலாத்காரம்
மேலும் பர்கூர் அருகே வனப்பகுதியில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனிடையே சிறுமியின் தாய் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் மகளை, ராஜ்குமார் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ராஜ்குமாரை பிடித்தனர். மேலும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை ராஜ்குமார் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ,வாலிபர் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் சிறுமியை காப்பக்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.