பட்டா மாற்றம் செய்ய வந்த இளம்பெண் கற்பழிப்பு
கடலூரில் பட்டா மாற்றம் செய்ய வந்த இளம் பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 43). இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு அதே பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளாா்.
பின்னா் அந்த வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, இளையராஜாவை அணுகினார். அப்போது அந்த பெண், கிராம நிா்வாக அலுவலகத்திற்கு சென்று வந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வீடியோ கால்
அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக அந்த பெண், சென்னை அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். அப்போது இளம்பெண், இளையராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்வு சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து கேட்டு வந்தார். இதில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இதற்கிடையே இளையராஜா, அந்த இளம்பெண்ணை நேரில் சந்திக்க வரவேண்டும் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.
செல்பி
அதனால் இளம்பெண், இளையராஜாவுடன் சம்பவத்தன்று மாமல்லபுரம் சென்றார். அங்கு இருவரும் முத்தம் கொடுப்பது போல செல்பி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இளையராஜா, அந்த இளம்பெண்ணை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.
வழக்குப்பதிவு
இதில் மனமுடைந்த அந்த இளம்பெண், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இளையராஜா மீது இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகிறார். கிராம நிர்வாக அலுவலர், பெண்ணை மிரட்டி கற்பழித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.