எனது தோழிக்கு 5 முறை நேர்ந்த பலாத்கார கொடுமை:'என்னையும் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார் ஆசிரம நிர்வாகி'வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம்
என்னை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஆசிரம நிர்வாகி, எனது தோழியை 5 முறை பலாத்காரம் செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தா மாநிலம் ஹவுடா பகுதியை சேர்ந்த 30 வயது பெண், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம், ஆசிரமத்தில் நடந்த விவரம் குறித்து கெடார் போலீசார் வாக்குமூலமாக பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அறையில் கட்டிப்போட்டு கொடுமை
அதன்படி அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது கணவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு விட்டுவிட்டு, தமிழகத்துக்கு வந்துவிட்டேன். இங்கு ஊர், ஊராக சுற்றித்திரிந்த போது, 2019-ம் ஆண்டு எப்படியோ விழுப்புரம் பஸ்நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்.
அப்போது அங்கு வந்த யாரோ, என்னை அன்பு ஜோதி ஆசிரமத்தில் விட்டு சென்றார். ஆசிரமத்தில் சமைக்கும் வேலை செய்வேன். அப்போது ஆசிரமத்தில் வேலை செய்ய மறுத்தால் ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா மற்றும் அங்கு வேலை செய்யும் பூபாலன், பிஜூ, அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, ஆம்புலன்ஸ் டிரைவர் தாஸ் ஆகியோர் என்னை அறையில் பூட்டி வைத்து கட்டிப்போட்டு, அடித்து கொடுமைப்படுத்துவார்கள்.
கட்டாயப்படுத்தி உடலுறவு
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் உள்ள அவர்களது அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு போகலாம் என்று கூறி என்னை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
அங்கு ஆண்கள், பெண்கள் என்று சுமார் 30 பேர் இருந்தார்கள். நள்ளிரவு 12 மணியளவில் ஜூபின்பேபி என்னை அழைத்து சென்று ஒரு அறையில் தங்க வைத்து, உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி என்னை வற்புறுத்தினார். நான் வேண்டாம், இது தப்பு என்று தெரிவித்தேன்.
ஆனால், அவர் எனது கன்னத்தில் மாறிமாறி முத்தங்கள் கொடுத்து என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு, பலாத்காரம் செய்தார். மறுநாள் குண்டலப்புலியூருக்கு அழைத்து வந்துவிட்டனர்.
தோழிக்கு நேர்ந்த கொடுமை
அங்கு எனக்கு நடந்த கொடுமை குறித்து, ஆசிரமத்தில் உள்ள எனது தோழி ஒருவரிடம், தெரிவித்தேன். அப்போது அவர், ஜூபின் சார் என்னிடம் இதுபோன்று 5 முறை உடலுறவு வைத்துக்கொண்டார் என்று தெரிவித்தார். இதை நாங்கள் வெளியில் சொல்வதற்கு பயந்து இருந்தோம்.
இந்நிலையில், ஒருநாள் ஜூபின்பேபி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேரளா சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நான் உள்பட 3 பேர் ஆசிரமத்தில் இருந்து தப்பித்து, ஆட்டோவில் விழுப்புரத்துக்கு வந்து, அங்கிருந்து பஸ்சில் வேளாங்கண்ணிக்கும், பின் ரெயிலில் கோவைக்கும் சென்றோம்.
குரங்கு வைத்து கடிக்க வைத்தனர்
ஆனால், நாங்கள் இருக்கும் இடத்தை எப்படியோ அறிந்து கொண்ட ஜூபின் பேபி ஆம்புலன்ஸ் டிரைவர் தாஸ் உதவியுடன் கோவைக்கு வந்து, எங்களை மீண்டும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தார். அங்கு எங்களை கட்டிப்போட்டு இனி தப்பி சென்றால் கொன்றுவிடுவோம் என்று கூறி ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி ஆசிரமத்துக்கு போலீசார் விசாரணைக்காக வந்தனர். அப்போது என்னை அழைத்து கேட்டால் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால், அவர்கள் வளர்க்கும் குரங்கை தன்னை கடிப்பதற்காக அவிழ்த்து விட்டனர். இதில் குரங்கு கடித்து எனக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அங்கு விசாரணைக்கு வந்த கிராம உதவியாளர் என்னை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில்(147) சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், (148)ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், (342), (344) சிறைபிடிப்பது, (294-பி) ஆபாசமாக திட்டி தாக்குதல், (393) கையால் அடிப்பது, (324) ஆயுதங்களால் தாக்குதல், (326) கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், (366) கடத்தல், (376) கற்பழிப்பு, 506(2) கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.