அபூர்வ மரகத நடராஜர் மீது சந்தனம் களையப்பட்டது


அபூர்வ மரகத நடராஜர் மீது சந்தனம் களையப்பட்டது
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பச்சை மரகத நடராஜர்

ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி உள்ளனர். இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான ஒரே மரகத கல்லினால் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சந்தனகாப்பு களையப்பட்டது

நேற்று காலை 7.45 மணிக்கு நடராஜர் கோவில் நடைதிறக்கப்பட்டு 8மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஆபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் தவிர வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். ரூ.10, 50, 100, 200 கட்டண தரிசன வரிசைகளில் ஏராளமான நின்று சென்று தரிசனம் செய்ததை காணமுடிந்தது.

சிறப்பு பஸ்கள்

விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காலை சந்தனக்காப்பு களைந்தது முதல் இரவு மீண்டும் சந்தனகாப்பு பூசும் வரை பக்தர்கள் வரிசையில் நின்று அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. இதையடுத்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும். நேற்று இவ்விழாவையொட்டி ராமநாதபுரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திருஉத்தரகோசமங்கைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவில் ஆதிசிதம்பரம் அபிநயா நாட்டியாஞ்சலி சார்பில் சந்தனம் களையும் நேரம் முதல் மறுநாள் காலை சந்தனம் களையும் வரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 36 பரதநாட்டிய குழுவினர் இதில் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர்.


Next Story