தஞ்சை அருங்காட்சியகத்தில் காணாமல் போன அரிய ஓவியங்கள் அமெரிக்காவில் விற்பனை
தஞ்சை அருங்காட்சியகத்தில் காணாமல் போன அரிய ஓவியங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.
சென்னை,
தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட முதல் பைபிள் புதிய ஏற்பாடு அரிய படைப்பு, தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. விலை மதிக்க முடியாத முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த பைபிள், கடந்த 10.10.2005 அன்று காணாமல் போய்விட்டது. காணாமல் போன முதல் தமிழ் பைபிள் 300 ஆண்டுகள் பழமையானது. அரிய பொக்கிஷம் போன்றது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ்கலெக் ஷன் என்ற நிறுவனத்தின் ஆன்லைன் வலைதளத்தில், காணாமல் போன முதல் தமிழ் பைபிள் காணப்பட்டது. அதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்தனர். இதுபோல தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மற்றும் அவரது மகன் சிவாஜியின் அரிய ஓவியங்களும் காணாமல் போய்விட்டன.
அமெரிக்காவில் விற்பனை
தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தற்போது இந்த அரிய ஓவியங்கள் அமெரிக்காவில் உள்ள பீபாடி ஏசெக்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மூலம் இந்த அரிய வகை ஓவியங்கள் விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை.
இந்த அரிய ஓவியங்களையும், முதல் தமிழ் பைபிளையும் தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
2 சிலைகள் மீட்பு
கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை திருவலஞ்சுழியில் இருக்கும், ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற சிலை விற்பனை கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 பழமையான ஐம்பொன் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மீட்டனர். அந்த சிலைகள் தென்ஆப்பிரிக்காவுக்கு கடத்தி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சிலை விற்பனை கூடத்தின் உரிமையாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.
இந்த சிலை விற்பனை கூடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசர் மற்றும் புத்தர் உலோக சிலைகள் கைப்பற்றப்பட்டது. இந்த சிலைகள் சோழர் காலத்து சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சிலைகள் எந்த கோவிலில், யாரால் திருடப்பட்டது, என்று விசாரணை நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.