தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு


தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி  போலீஸ் சூப்பிரண்டிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு
x

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு

நாமக்கல்

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் தி.மு.க‌. துணை பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி. சமீபத்தில் இந்துக்களின் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசி இருந்தார். எனவே அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் நகர, ஒன்றிய பா.ஜ.க. தலைவர் அசோக்குமார், வடக்கு, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சம்பத், சங்கர் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் இந்துக்கள், இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர். இதனால் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் குமாரபாளையம் நகர பா.ஜ.க. தலைவர் கணேஷ்குமார் தலைமையில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் இந்துக்கள் மீது அவதூறு கருத்து கூறிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களிடம் ஆதரவை திரட்ட கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கையொப்பம் போட்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட செயலாளர் சுகுமார், வர்த்தக அணி தலைவர் சேகர், செயலாளர்கள் சண்முகராஜன், மணிகண்டன், பொது செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story