எலியார்பத்தி சுங்கச்சாவடியில்1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு


எலியார்பத்தி சுங்கச்சாவடியில்1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு
x

எலியார்பத்தி சுங்கச்சாவடியில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.

மதுரை


சுங்கக்கட்டணத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இந்த கட்டண உயர்வு வழக்கமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், மொத்தவிலை நிர்ணய குறியீட்டு (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையில் இந்த கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயர்வானது கடந்த ஆண்டு வரை 5-6 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 10-65 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் மட்டுமே 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் திருமங்கலம் கப்பலூர், செங்கல்பட்டு பரனூர் உள்ளிட்ட 6 சுங்கச்சாவடிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் விதிமீறி அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 4-வழிச்சாலையில் எலியார்பத்தி மற்றும் புதூர்பாண்டியாபுரம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த வருடம் ஆகஸ்டு 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

தற்போது இந்த சுங்கச்சாவடியில், ஒரு வழிக்கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.75 முதல் அதிகபட்சமாக ரூ.415 வரை வசூலிக்கப்படுகிறது. இருவழிக்கட்டணத்தை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.625, மாதாந்திர பாஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில் குறைந்தபட்சமாக ரூ.2,215 முதல் அதிகபட்சமாக ரூ.12,475 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் 10 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எலியார்பத்தி சுங்கச்சாவடியை பொறுத்தமட்டில், 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கிருந்து 64 கி.மீ. தூரத்துக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 4-வழிச்சாலை அமைக்க ரூ.629 கோடி செலவாகியுள்ளது. இந்த சுங்கச்சாவடியை நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மதுரை மாவட்டத்துக்குள் அமைந்துள்ள திருமங்கலம், மேலுர் சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது.


Next Story