பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூவன் வாழைத்தார் விலை குறைந்தது
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூவன் வாழைத்தார் விலை குறைந்தது.
பரமத்திவேலூர்:
ஏல சந்தை
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் பூவன் வாழை அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தவிர பரமத்திவேலூரில் தினமும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
பூவன் விலை குறைந்தது
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது. விசேஷ நாட்கள் ஏதும் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.