விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு
x

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனையானது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஏலச்சந்தை

காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணகான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

வாழைத்தார் விலை உயர்வு

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 3 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும் ஏலம் போனது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைத்தார் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட வாழைத்தார்கள் விலை உயர்ந்து விற்பனையானதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story