நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள்
நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர செலவினங்களைக் குறைப்பதில் பெருமளவு கைகொடுக்கிறது. உணவு கிடைக்காமல் ஒருவரும் உறங்கக்கூடாது என்ற அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் சில வேளைகளில் சாப்பிட முடியாத அளவுக்கு தரமற்றதாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
'மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட பல கிராமப் பகுதிகளில் வழங்கப்படும் அரிசி பல நேரங்களில் குப்பைகள், கல் மற்றும் வண்டு நிறைந்து காணப்படுகிறது. சில நேரங்களில் துர்நாற்றம் வீசுவதால் சமைத்து சாப்பிட முடியாத நிலையில் கோழிகளுக்கு தீவனமாக போடும் நிலை உள்ளது.
ஜோத்தம்பட்டி நியாய விலைக்கடை
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லிலிருந்து எடுக்கப்படும் அரிசியே பொது வினியோகத் திட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலரின் அலட்சியப் போக்கால் மிகச் சிறந்ததாக பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி தரமற்றதாக வழங்கப்படும் நிலை உள்ளது. அதுபோல பல நியாய விலைக்கடைகளில் 3-ம் தர கோதுமையே வழங்கப்படுகிறது. அதிலும் குப்பைகள் கலந்திருப்பதுடன் சில நேரங்களில் உளுத்து மாவாய் உதிரும் நிலையில் உள்ளது.
எனவே நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மேலும் நியாய விலைக்கடைகளில் டீத்தூள், சோப், மளிகை பொருட்கள் என தேவையற்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்'என்று கூறினர். மேலும் மடத்துக்குளத்தையடுத்த ஜோத்தம்பட்டி நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட பச்சரிசி தரமற்றதாக உள்ளதாக அரிசியுடன் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.