ரேஷன் பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும்
ரேஷன் பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சோளிங்கர் வட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் மாதத்தில் 10 நாட்களுக்கும் குறைவாகவே திறக்கப் படுவதாகவும், ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் அரசின் வழிகாட்டுதல் படி பொதுமக்களுக்கு ஒரே தவணையில் வழங்குவது இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக மாதத்தின் 10, 15-ந் தேதிக்கு மேல் தான் அரிசி உள்ளிட்ட ஒரு சில பொருட்களே வழங்கப்படுவதாகவும் மற்ற பொருட்கள் இன்னும் வரவில்லை என கூறி திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுக்கான ரேஷன் பொருட்களை பெற பொதுமக்கள் மாதத்தில் 3 அல்லது 4 முறை ரேஷன் கடைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உரிய நேரத்தில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் ரேஷன் கடை தொடர்ந்து செயல்படவும், பொதுமக்களுக்கான பொருட்களை ஒரே தவணையில் வழங்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.