வேனில் கடத்த முயன்ற 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
பாலக்கோட்டில் இருந்து பெங்களூருவுக்கு வேனில் கடத்த முயன்ற 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாகன சோதனை
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் போலீசார் பாலக்கோடு- பெல்ரம்பட்டி சாலையில் வாழைத்தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தினர்.
இதனால் போலீசாரை பார்த்ததும் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 12 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பெண் கைது
அப்போது பாலக்கோடு பகுதியை சேர்ந்த விஜயா (வயது 40) என்பவர் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயாவை கைது செய்தனர். மேலும் சரக்கு வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.